மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வரும் 14 வயது மாணவிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவலறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணம் அவரது தந்தையே என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு மாத காலமாகச் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்ற பிறகு, டீக்கடையில் வேலை செய்து வந்த அவரது தந்தை தனது மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாகச் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.