அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள புங்கங்குழி-ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் ரகுபதியின் மனைவி பாண்டி லெட்சுமி (33), தனது இளைய மகன் கவிலேஷ் (3) ஐத் துப்பட்டாவால் இடுப்பில் இறுக்கிக் கட்டியபடி ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி லெட்சுமியை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு ரகுபதி திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லோகேஷ் (7) மற்றும் கவிலேஷ் (3) என இரண்டு மகன்கள் இருந்தனர். கணவன் மனைவி இருவரும் அடிக்கடி திருப்பூருக்குச் சென்று கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ரகுபதி திருப்பூருக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
ஏரிக்கரையில் செல்ஃபி எடுத்த தாய்
ஆனால், பாண்டி லெட்சுமி தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகு தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு திருப்பூருக்குச் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு இரண்டு மகன்களுடன் பஸ்ஸில் புறப்பட்ட பாண்டி லெட்சுமி, விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பலவர் கட்டளை கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர், பேருந்து நிலையம் அருகே உள்ள கீழக்கொட்டேரியில் தனது மகன்களுடன் செல்போனில் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார்.
செல்ஃபி எடுத்த பிறகு, தனது மூத்த மகன் லோகேஷை ஏரிக்கரையில் தனியாக நிற்க வைத்துவிட்டு, இளைய மகன் கவிலேஷைத் துப்பட்டாவால் தனது இடுப்பில் இறுக்கிக் கட்டியபடி ஏரியில் குதித்தார். இதைக் கண்ட 7 வயது லோகேஷ் கதறியழுத சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், சிறுவனிடம் விசாரித்து விவரம் அறிந்து உடனடியாக ஏரியில் குதித்து பாண்டி லெட்சுமியையும், கவிலேஷையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
எனினும், அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் விரைந்து சென்று தாயும் மகனுமாகிய இருவரது உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டி லெட்சுமி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
