திருப்பூரில் வேலைக்காக குடியேறிய உத்தரப்பிரதேச தம்பதியின் 15 வயது மகள், அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் நிலையில், சமூக வலைதளத்தில் அறிமுகமான இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்த தகவலின்படி, மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் கொங்கு மேயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (19) என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்டிருந்த இந்த நட்பு, பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகளில் மாணவியை ஏமாற்றி, சஞ்சய்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவத்தால் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புகாரின் பேரில், போலீசார் சஞ்சய்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.