நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 7 வயதைக் கடந்த குழந்தைகள், தங்களது பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது.
இதை தவறினால், குழந்தைகளின் ஆதார் அட்டைகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘பால் ஆதார்’ எனப்படும் நீல நிற ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, குழந்தைகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் மட்டுமே பெறப்பட்டு, கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், குழந்தை 7 வயதை கடந்ததும், இந்த தகவல்களை முழுமையாக பதிவுசெய்து புதுப்பிக்க வேண்டும்.
இந்த புதுப்பிப்பு பணியை, அருகிலுள்ள இசேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் இலவசமாக (5-7 வயதுக்குள்) மேற்கொள்ளலாம். ஆனால், 7 வயதுக்குப் பிறகு செய்யும் புதுப்பிப்புக்கு ₹100 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக பெற்றோர்கள் பதிவு செய்துள்ள கைபேசி எண்களுக்கு யுஐடிஏஐ குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து யுஐடிஏஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“7 வயதை கடந்த குழந்தைகள், தங்களது ஆதார் விவரங்களை சரியாக புதுப்பிக்காத நிலையில், அவர்கள் பயன்பாட்டில் உள்ள ஆதார் அட்டைகள் முடக்கப்படும். குழந்தைகளின் பள்ளி சேர்க்கை, அரசு நலத் திட்டங்கள், மருத்துவ உதவிகள் போன்றவை அனைத்திற்கும் ஆதார் அவசியமாக இருந்துவரும் நிலையில், பெற்றோர்கள் இந்த செயலை தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது குழந்தைகளின் எதிர்கால பயன்பாடுகளை கருத்தில் கொண்டு, பெற்றோர் உடனடியாக ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
