தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்கள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன.

தோல்விக்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.

“விருப்பம் இல்லாதவர்கள் பதவியில் இருந்து விலகிக்கொள்ளலாம்” என ஸ்டாலின் எச்சரித்துள்ள நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் தனது ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பது போன்ற திரைப்படக் காட்சி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். உதயநிதியின் ஆதிக்கம் மற்றும் தவெக-வின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி சரிந்ததாகக் கூறப்படும் நிலையில், எழிலனின் இந்தப் பதிவு சீனியர் நிர்வாகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தவெக-வினரைத் தரக்குறைவாகப் பேச வேண்டாம் என அட்வைஸ் செய்த எழிலன், இப்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்துப் போட்டுள்ள பதிவு அறிவாலய வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.