வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ. 27) கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வரும் சனிக்கிழமை (நவ. 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
