ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் நர்சாகப் பணியில் சேர்ந்த வெங்கடசாயி என்பவர், மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

அவர், ஆபரேஷன் தியேட்டரில் பெண் மருத்துவர்கள் உடை மாற்றுவதையும், மருத்துவ மாணவிகள் ஆடை மாற்றுவதையும் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து வெங்கடசாயியைக் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்தனர்.

போலீசார் வருவதற்கு முன்பே, பெண் மருத்துவர்கள் வெங்கடசாயியின் செல்போனைப் பிடுங்கி, அதில் இருந்ததாகக் கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு, நீக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோக்களை மீட்கும் முயற்சியாக, வெங்கடசாயியின் செல்போனைப் போலீசார் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது