நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஆனந்த் சேகர் (41) என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கிளை தற்பொழுது உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 6, 7 மற்றும் 8 வயதுடைய அச்சிறுமிகள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவிக்க, மகளிர் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ நீதிமன்றம் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்திற்காக ஆனந்த் சேகருக்கு தூக்கு தண்டனை விதித்திருந்த நிலையில், தற்பொழுது அதனை மதுரை ஐகோர்ட்டு கிளையும் அதிரடியாக உறுதி செய்துள்ளது. மேலும்  பாலியல் குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் என்றும், குற்றவாளி சிறையில் மீதி காலத்தைக் கழிப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.