தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், பள்ளிகளிடம் இருந்து லஞ்சப் பணத்தை வசூலித்துக் கொடுத்ததாக திமுக செய்தித் தொடர்பாளர் துறை பிரிவு துணைத் தலைவரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான பி. டி. அரசகுமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

தொடக்கத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெற்ற லஞ்சத் தொகை ரூ.200 கோடி வரை இருக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், கைதான பி. டி. அரசகுமாரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தற்பொழுது முடிவு செய்துள்ளனர்.