இந்தியாவின் ஃபேவரைட் ஸ்ட்ரீட் ஃபுட்டான பானிபூரி, இப்போது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் பிரம்மாண்ட வருமானத்திற்காகவும் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் கேசி பெரேரா என்ற கன்டென்ட் கிரியேட்டர் பகிர்ந்த ஒரு வீடியோ, ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ளது. ஒரு சாதாரண பானிபூரி கடைக்காரர் மாதம் 90,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக அந்த வீடியோவில் ஒரு கணக்கு போடப்பட்டுள்ளது.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என வெறும் 6 மணி நேரம் மட்டுமே கடை நடத்தும் அவர், ஒரு நாளைக்கு 100 பிளேட்டுகள் வரை விற்கிறாராம். ஒரு பிளேட் 30 ரூபாய் என கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 3,000 ரூபாயும், மாதத்திற்கு 90,000 ரூபாயும் வருமானம் வருவதாக அந்த வீடியோ கூறுகிறது. அதாவது வருடத்திற்குச் சுமார் 11 லட்சம் ரூபாய்! இதைக் கேட்ட பலரும், “ஐடி வேலையை விட இதுவே மேல்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஆனால், இது வெறும் மொத்த விற்பனை (Revenue) மட்டுமே என்றும், இதில் மாவு, மசாலா, உருளைக்கிழங்கு, எரிபொருள் மற்றும் இட வாடகை போன்ற செலவுகளைக் கழித்தால் உண்மையான லாபம் இவ்வளவு இருக்காது என்றும் விவரம் தெரிந்தவர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த ‘பானிபூரி மேக்ஸ்’ இப்போது செம வைரல்!
