தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால், திட்டமிட்டபடி வில்லிவாக்கம் பகுதிக்குப் பிரச்சாரத்திற்குச் செல்லாமல் பாதியிலேயே தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது பிரச்சாரத்தின் போது போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், திமுக இதில் அலட்சியம் காட்டியதாகவும் விஜய் தரப்பில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் இந்தப் புகாருக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மதிவதனி மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்பதுபோல் அரசியல் செய்யும் ‘weekend politician’ வீட்டுக்கு சீக்கிரம் ஓடுவதற்காக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, திமுக மீது பழி சுமத்த தொடங்கிவிட்டார்கள்.
இது அண்ணன் @Udhaystalin அவர்கள் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களின் படங்கள்!
தமிழ்நாட்டு மக்கள்… pic.twitter.com/QlexiT6urw
— S.M.Mathivadhani (@MMathivadhani) March 31, 2026
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிவதனி, “ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்பது போல அரசியல் செய்யும் ‘வீக்கெண்ட் அரசியல்வாதி’ (Weekend Politician) வீட்டுக்கு ஓடுவதற்காகவே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, இப்போது திமுக மீது பழி போடத் தொடங்கிவிட்டார்” என்று கிண்டலாகத் விமர்சித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பது போல பகுதி நேரமாக அரசியல் செய்யாமல், மக்கள் களத்தில் முழுமையாக நிற்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதுகாப்பு குறைபாடு என்று விஜய் கூறுவது வெறும் சாக்குப்போக்கு தான் என்றும், சீரியஸாக அரசியல் செய்யத் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதாகவும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே தற்போது கடும் வார்த்தை போர் மூண்டுள்ளது.
