தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் குறிப்பாகக் குடும்பத் தலைவிகளின் பெயரில் இந்த விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண ஒற்றை கதவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியின் அரசு கொள்முதல் விலை சுமார் 10000 முதல் 12000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசுக்கு சுமார் 26000 கோடி ரூபாய் வரை நிதிச் சுமை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டி தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உரிமைத் தொகை மற்றும் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஒருமுறை நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் தற்பொழுது தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
