சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், மேடைக்கு அருகே திடீரென ஒரு மதுபாட்டில் வந்து விழுந்து உடைந்தது.

அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மர்ம நபர்கள் இந்த மதுபாட்டிலை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். ரத்தக் காயங்களுடன் இருந்த அவரை உடனடியாக மீட்ட தொண்டர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், பாட்டில் வீசிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் தற்போது இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.