டெல்லியில் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, 8 வாரங்களுக்குள் தலைநகரில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்குமாறு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று  திருச்சி மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தெருநாய்களை அடைப்பது சரியான தீர்வல்ல, மாறாக அவற்றுக்கு சிகிச்சை, கருத்தடை போன்ற வழிகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்மு ராமச்சந்திரன், “நாய்களை வாயில்லா ஜீவன் என்று சொல்வதற்கு காரணம், அவற்றால் தனது தேவையைச் சொல்ல முடியாது என்பதுதான். பசி, வலி வந்தால் அவையும் கோபம் காட்டும். ஆனால் அதற்காக அவற்றை குற்றம் சொல்ல முடியாது. நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கும் தன்மை கொண்டவை, சில நேரங்களில் கடித்தால் அதற்கு வருந்துகிறோம், ஆனால் அதுவே காரணம் காட்டி எல்லா நாய்களையும் பிடிப்பது தவறு” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.