டெல்லியில் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இதில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகரில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இதே நேரத்தில், சென்னை மற்றும் திருச்சியில் இந்த உத்தரவை கண்டித்து விலங்கு நல அமைப்புகள் சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது. குறிப்பாக சென்னை பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு, இயக்குனர் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டம், தெருநாய்களுக்கு நீதி கோரி நடைபெற்றது.
அப்போது ஊடகங்களுக்கு பேசிய நடிகை வினோதினி, “ரேபிஸ் தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு லட்சம் பேரில் ஒருவர் ரேப்பிஸ்ட் இருப்பதைப் போலவே, ஒரு லட்சம் நாய்களில் ஒருவனுக்கு மட்டுமே ரேபிஸ் இருக்கலாம்.
அதனை தனியே சிகிச்சை அளிக்கலாம். நிதியை மாநகராட்சிகள் சரியாக பயன்படுத்தவில்லை. நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்தலாம். உணவு குப்பைகளை சாலைகளில் கொட்டுவதே அவற்றின் பெருக்கத்துக்கு காரணம். தெருக்களை சுத்தமாக வைத்தால் பிரச்சனை தீரும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
