தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசில் அங்கம் வகிப்பதால், திமுக கூட்டணியில் இனி தொடர்ந்து பயணிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் விலகுவதாகத் தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் ஐயுஎம்எல் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தலுக்குப் பின் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.
இதையடுத்து தவெக அமைச்சரவையில் ஐயுஎம்எல் கட்சிக்கு இடம் கொடுக்கப்பட்டு, பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேபோல், வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றார்.
செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய காதர் மொகிதீன், “60 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் பயணித்தோம். ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் எனத் தேர்தலில் கடுமையாக உழைத்தோம், ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்து தவெக வெற்றி பெற்றது. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு அளித்தோம். நாங்கள் கேட்காத போதும் விஜய் எங்களை அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார், அவருக்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.
மேலும், “திமுக-விற்கு வாக்களிப்பது ஆறாவது கடமை என்று நான் எப்போதும் கூறவில்லை; ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதே ஆறாவது கடமை என்றுதான் கூறினேன்” என விளக்கமளித்த அவர், வரவிருக்கும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் தவெக ஆட்சி நீடிக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தவெக கூட்டணியில் ஐயுஎம்எல் கட்சி தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
