தமிழகத்தில் 58 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், இந்த முறை ஆட்சியில் பங்கைத் தொண்டர்கள் விரும்புவதாகத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சியாக மாறுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் சந்திப்புகள் குறித்து எழும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு விளக்கங்களை அவர் அளித்துள்ளார்.
குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜயைச் சந்தித்தது அரசியல் காரணங்களுக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது விளம்பரம் அல்லது சினிமா தொடர்பான வணிக ரீதியான சந்திப்பாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மாநில அளவிலான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் பெயர்களைத் தேவையில்லாமல் இழுப்பது முறையல்ல என்றும் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
