காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்வதால் அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகளை அவர் பிரித்து எடுத்து செல்கிறாரென்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர் 50 ஆண்டுகள் அரசியலில் இருந்தவர். மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதே உண்மை. அந்த வகையில், இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒருவர் விலகிச் சென்றதால் அ.தி.மு.க.விற்கு ஒரு குறைவு ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் த.வெ.க.விற்கு நிச்சயமாக உதவும். ஏனெனில் அந்த கட்சி தேர்தல் அனுபவம் கொண்ட தலைவர்களை தற்போது கொண்டிருக்கவில்லை. இருப்பினும், செங்கோட்டையனின் அனுபவத்தை த.வெ.க. முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா? அவர் சொல்லும் படி நடந்து கொள்வார்களா? மேலும் அவருக்கு போதுமான அதிகாரம் வழங்கப்படுமா? என்பதே இப்போது எழும் கேள்வி.” என்று கூறினார்.
