உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் பிஜிஐ (PGI) காவல் எல்லைக்குட்பட்ட கல்லி பஸ்சிம் பகுதியில், 40 வயதான பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சந்தீப் குமார் என்பவர் புதன்கிழமை மதியம் தனது அலுவலக வாசலிலேயே மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பதற வைத்துள்ளது.

ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் குமார், மதியம் 12:30 மணி அளவில் தனது ஊழியர் விபின் குமாருடன் காரில் அலுவலகத்திற்கு வந்துள்ளார். காரை விட்டு கீழே இறங்கி, போனில் பேசிக்கொண்டே அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது, அங்கே மறைந்திருந்த முகமூடி அணிந்த கொலையாளி ஒருவன் திடீரென சந்தீப்பை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளான்.

நெஞ்சு, வயிறு மற்றும் தலை என மூன்று இடங்களில் குண்டுகள் பாய்ந்ததால் சந்தீப் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஊழியர் விபினும், அக்கம் பக்கத்தினரும் அலறியடித்துக்கொண்டு ஓடி வருவதற்குள், அந்த முகமூடி கொலையாளி ராய்பரேலி ரோட்டில் பைக் உடன் தயார் நிலையில் நின்றிருந்த தனது கூட்டாளியுடன் தப்பியோடிவிட்டான்.

வெறும் 50 வினாடிகளுக்குள் அரங்கேறிய இந்த அதிர்ச்சி கொடூரம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. உயிருக்குக் போராடிக் கொண்டிருந்த சந்தீப்பை மீட்டு உடனடியாக அபெக்ஸ் ட்ராமா சென்டர் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் குறித்து லக்னோ டிசிபி அமித் குமார் ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

நிலத் தகராறு, தொழில் போட்டி அல்லது பணப் பரிவர்த்தனைப் பகை போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.