கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பிரபல அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தான் பயணித்த ஆட்டோவின் பெண் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் மற்றும் அவரது சுதந்திரமான சிந்தனைகள் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

அமேசான் ஊழியரான ஸ்ரேயாஷி சின்ஹா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு அவசரப் பணிக்காக ஆட்டோ ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அப்போது அவரை அழைத்துச் செல்ல ஒரு பெண் ஓட்டுநர் வந்துள்ளார். பயணத்தின் போது, அந்தப் பெண் ஓட்டுநருக்கு மொபைல் போனைப் பயன்படுத்தி வழித்தடத்தை  கண்டறிவதில் சிறிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shreyashiiii (@shree__yeahh)

இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயாஷி சின்ஹா அவருக்கு உதவ முன்வந்து வழி காட்டியபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது, நீங்கள் ஏன் இந்த ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று ஸ்ரேயாஷி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஓட்டுநர், “அடுத்தவர் வீட்டில் பாத்திரம் விளக்கி, அடிமையாக வேலை செய்வதை விட, சுயமரியாதையுடன் ஆட்டோ ஓட்டுவது எவ்வளவோ மேலானது. எனக்குப் புதிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

மேலும், இத்தொழிலில் நேரக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை; எனக்கு விருப்பமான நேரத்தில், விருப்பமான இடத்திற்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று என்னால் சுதந்திரமாகச் சம்பாதிக்க முடிகிறது” என்று நெகிழ்ச்சியூட்டும் பதிலளித்துள்ளார். வாழ்க்கையின் தேர்வுகள் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து அந்தப் பெண் ஓட்டுநர் கொண்டிருந்த அசாத்தியத் தெளிவைக் கண்டு வியந்த அமேசான் ஊழியர், சுயசார்புடன் வாழத் துடிக்கும் இத்தகைய பெண்களே சமூகத்தின் உண்மையான வழிகாட்டிகள் எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.