விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, படித்த வேலை இல்லாத மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக 75 லட்சம் வரை மானியத்துடன் சுய தொழில் கடன் உதவி பெற்று பயன் பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

அதன்பிறகு 12-ம் வகுப்பு, ஐஐடி, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு போன்றவைகள் முடித்திருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவை பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 35 விழுக்காடு மானியத்துடன் 75 லட்சம் முதல் 5 கோடி வரையில் கடன் உதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் 10 லட்சம் வரையிலும், சேவை பிரிவின் கீழ் 5 லட்சம் முறைகளும் கடன் உதவி பெறுவதற்கு எந்த வித கல்வித் தகுதியும் தேவையில்லை. இதேபோன்று 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்று திறனாளிகளுக்கு உற்பத்தி தொழிலில் 50 லட்சம் வரையிலும் சேவை தொழில்களில் 20 லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு 35 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக 17.50 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் மேற்கண்ட கடன் உதவி திட்டங்களில் உங்களுக்கு வேண்டிய திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs , www.kviconline.gov.in.agency DIC என்ற இணையதளங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரில் அணுகியோ, 8925534036 என்ற தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டோ கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.