திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலியிடமே 5 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு தொண்டமாதேவி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (27) என்பவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அவருடன் பணியாற்றிய திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, அவரிடமிருந்து சிறுகச் சிறுக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை துரைராஜ் வாங்கியுள்ளார்.
இதனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, துரைராஜ் திடீரென அந்தப் பெண்ணுடன் பேசுவதைத் தவிர்த்ததுடன், அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது துரைராஜ் அவரைத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் ரோஷணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி துரைராஜைக் கைது செய்தனர். காதலித்த பெண்ணையே பணத்திற்காக ஏமாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
