மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக வைகோ சமீபத்தில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காகவும் தன்னுடைய மகனுக்காகவும் துரோகி என கூறிவிட்டார் என மல்லை சத்யா வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் மதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மல்லை சத்யா தான் காரணம் என ஒரு செய்தி பரவும் நிலையில் தற்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் இது நாள் வரை இருந்தேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலைக்கு நிச்சயமாக நான் காரணம் கிடையாது.
மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய அரசியல் பயணத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றியுள்ளேன். நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்த நிலையில் எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் உங்களை விட்டுக் கொடுத்தது கிடையாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்பமோ துன்பமோ விருந்தோ மருந்தோ மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற மறுமலர்ச்சி பாதையில், என் மீது அபாண்டமாக சுமத்தப்பட்ட துரோகி பழி காரணமாக என்னால் ஐந்து நாட்களாக தூங்க முடியவில்லை.
என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை நீங்கள் சொல்லி இருக்கலாம். அறம் சார்ந்த என்னுடைய அரசியல் வாழ்க்கையை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு உங்களுக்கு துரோகம் என்று சொல்தான் கிடைத்ததா. சொல்ல முடியாத வேதனையில் துடிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் என் மீது அன்பு கொண்டவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் இந்த சோதனையான காலகட்டத்தை நிச்சயம் நான் கடந்து வருவேன் என்று கூறியுள்ளார்.
