காசா பகுதியில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் தாக்குதல்களால் 130 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக, மருத்துவ ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 2 பேரும் அடங்குகிறார்கள். இந்த தாக்குதலில் 263 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளின் கீழும், சாலைகளிலும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் விமான தாக்குதல்களின் காரணமாக, அவசர நிவாரண அணிகளும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் அந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 18 முதல் இதுவரை காசா பகுதியில் 634 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,172 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மேற்குக் கரை பகுதிகளான ஜெனின் மற்றும் துல்கர்ம் நகரங்கள் மற்றும் அகதிகள் முகாம்களில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பலரும் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து, டஜன் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள வீதிகளில் 100% பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,200 வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேறியுதுள்ளதாகவும் நகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. ஜெனின் பகுதியில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். துல்கர்ம் மற்றும் நூர் ஷம்ஸ் முகாம்களில் 24,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதோடு 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மனிதாபிமான நிலைமை இப்போது மிக மோசமானதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
