அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யிஸ்ரோயெல் லீப், யுனைட்டெட் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மெக்ஸிகோவிலிருந்து டெக்சாஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில், வயிற்றுப்பிணி காரணமாக லீப் கழிப்பறையில் சுமார் 20 நிமிடங்களுக்கு இருந்துள்ளார். இதனால் லீப்பின் பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி விமான பணிபெண்ணிடம் கழிவறைக்கு சென்ற லீப் திரும்பி வரவில்லை என கூறியுள்ளார்.

இதனால் பணிப்பெண் கழிவறைக்கு சென்று கதவைத் தட்டி பார்த்துள்ளார். ஆனால் லீப் கதவை திறக்கவில்லை. உடனே பைலட்டிடம் சென்று விஷயத்தை கூறியுள்ளனர். இதனையடுத்து பைலட் வந்து கழிப்பறை கதவை தட்டியுள்ளார். அப்போது லீப் சிறுது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் பைலட் கதவை உடைத்து, லீப்பை அவரது கால்சட்டையோடு வெளியே இழுத்து வந்துள்ளார்.

அப்போது லீப் ஆடைகள் சரிவர அணியப்படாத நிலையில் இருந்ததால், பொதுமக்களுக்கு முன்னிலையில் அவமானம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் யூதர்களைப் போல நடந்து கொள்கிறீர்கள் என மத அடிப்படையில் ஆன வன்முறை கருத்தை பைலட் கூறியதாக தெரிகிறது. விமானம் தரையிறங்கியதும், யிஸ்ரோயெல் மற்றும் அவருடன் வந்த ஜேக்கப் ஆகிய இருவரும் அமெரிக்க குடிநுழைவு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைவிளங்கிட்டு அவர்களை அழைத்து சென்றனர். இதனால் லீப்பின் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் லீப் தனது அடுத்த விமானத்தை தவறவிட்டார். அது மட்டுமில்லாமல் தங்குவதற்கு இடம், உணவு என அவருக்கு செலவு அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அவமதிப்பு, உடல் ரீதியான காயங்கள் என அனைத்திற்கும் சேர்த்து இழப்பீடு கேட்டு லீப்பும், ஜேக்கப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.