புனே-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள புகேவாடி பகுதியில் வெறும் 48 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 8 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் அதிர்ச்சியையும் அக்மார்க் பீதியையும் கிளப்பியுள்ளது.

கிராமத்தின் ஆசாத் சவுக்கில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் போஸ்டரில் (Obituary Board) ஒரே நாளில் 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றதை அடுத்துதான் இந்த மெகா விபரீதம் ஒட்டுமொத்த பொதுமக்களின் வெளிச்சத்திற்கே வந்தது.

இந்த 8 பேரில் சிலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, சிலர் பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்துள்ளனர், சில இயற்கை மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

இறந்தவர்களில் 4 பேருக்குக் குடிப்பழக்கம் இல்லாத நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் அனைவரும் எப்படி இறந்தார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்ததால், அங்குள்ள கள்ளச்சாராயத்தால் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்ததோ என்ற மெகா சந்தேகம் அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீயாய் பரவியது.

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த தாபோடி போலீசார் அடுக்கடுக்கான அதிரடி விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையின் முடிவில், இந்த 8 மரணங்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும், வெவ்வேறு காரணங்களால் தனித்தனியாக நிகழ்ந்தவை என்றும் மூத்த போலீஸ் அதிகாரி விஜய் வாக்மாரே தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, பாண்டுரங்க புகே என்ற முதியவர் இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால், விஜய் ரத்தோடு மற்றும் ராஜேந்திர ரத்தோடு ஆகிய இரு உடன்பிறந்த சகோதரர்களில், விஜய்க்கு முதலில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்த அதிர்ச்சிய தாங்க முடியாமல் தம்பி ராஜேந்திரனுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மேலும், ராஜேந்திர ராஜ்புத் என்பவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததும், அக்பர் பதான் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாகக் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நலம் குன்றி இறந்ததும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில், கள்ளச்சாராயம் குடித்து யாரும் சாகவில்லை என்றும், உறவினர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ள போலீசார், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை (Postmortem Report) வந்த பிறகே இறுதி உண்மை தெரியவரும் என அறிவித்துள்ளதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.