அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஓயாத புயலாகத் தொடர்ந்து வருகின்றன. சில்ஹெட் மாவட்டத்தின் கோயிங்காட் பகுதியில், பிரேந்திர குமார் டே என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அவர்கள் உயிர் தப்பி ஓடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.

“இங்கு வாழும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம், மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என அந்த ஆசிரியர் தரப்பில் அமைதியாகக் கூறப்பட்டாலும், நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதை யாராலும் மறுக்க முடியவில்லை.

கடந்த வாரம் ஃபெனி மாவட்டத்தில் சமீர் தாஸ் என்ற 27 வயது ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கடந்த 45 நாட்களில் மட்டும் வங்கதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் (RRAG) அதிர்ச்சிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. இடைக்கால அரசின் கீழ் சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகமும் இச்சம்பவங்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.