ராஜஸ்தானில் தான் முற்பிறவியில் ஆம்பர் (ஆமேர்) கோட்டையை ஆண்ட புகழ்பெற்ற மன்னர் முதலாம் மான்சிங் என்று 10 வயது சிறுவன் ஒருவன் கூறி வருவது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்க் மாவட்டத்திலுள்ள ஜெய்க்மாபாத் கிராமத்தைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் கன்ஹாராம் பைர்வா (10). இவனது செயல்களும் பேச்சும் தற்போது அந்தப் பகுதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்ஹாராமின் பெற்றோர் கூறுகையில், சிறுவனுக்கு இரண்டரை வயதிலிருந்தே அவனது நடத்தையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்ததாகக் கூறுகின்றனர். அவனது தாய் கியார்சி தேவி கூறுகையில், “அவன் முதன்முதலில் பேசிய வார்த்தையே ‘ராஜா மான்சிங்’ என்பதுதான். அவன் தன்னை ஒரு ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னராகவே கருதுகிறான். சாதாரண பாத்திரங்களில் உணவு உண்ண மறுப்பதோடு, வீட்டில் ஒரு சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்து போர் விளையாட்டுக்களை விளையாடுகிறான்” என்கிறார்.
ஆம்பர் கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புதையல்கள் மற்றும் புகழ்பெற்ற சிலாதேவி கோயிலின் வரலாறு குறித்து அச்சிறுவன் கூறும் தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வங்காளத்திலிருந்து சிலாதேவி சிலையைத் தான் கொண்டு வந்ததாகவும், நரபலி நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த அந்தச் சிலையின் கழுத்து சற்று சாய்ந்துவிட்டதாகவும் அவன் கதை கதையாகக் கூறுகிறான். அச்சிறுவனின் கூற்றுகளை ஆய்வு செய்தபோது சில முரண்பாடுகள் தென்படுகின்றன. தான் ஹல்திகாட்டி போரில் போரிட்டதாகக் கூறும் அவன், மன்னர் மான்சிங் இறந்த இடம் எது எனக் கேட்டதற்கு ‘தானிய மண்டி’ எனக் கூறுகிறான். ஆனால் வரலாறு மன்னர் மான்சிங் தென்னிந்தியாவில் இறந்ததாகக் கூறுகிறது.
தனக்கு இரண்டு ராணிகள் இருந்ததாகவும், ஜோதா பாய் தனது அத்தை என்றும் கூறுகிறான். தன்னை மன்னர் என்று கூறினாலும், இவனுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்றும், எதிர்காலத்தில் போலீஸ் அதிகாரியாக விரும்பவதாகவும் கூறுகிறான். சிறுவனின் இந்த வினோதப் பேச்சால் அவனது பள்ளியில் கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தினமும் ஊடகங்களும், பொதுமக்களும் இவனைப் பார்க்கப் பள்ளிக்கு வருவதால் வகுப்புகளை நடத்த முடியவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இது முற்பிறவி நினைவுகளா அல்லது சிறுவனின் அதீத கற்பனையா என்பது குறித்து நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். தற்போது இந்த ‘குட்டி ராஜா’ குறித்த விவாதம் ராஜஸ்தான் முழுவதும் பற்றிப் பரவியுள்ளது.
