மத்தியப் பிரதேசத்தின் சிறிய நகரமான குணாவைச் சேர்ந்த துர்கேஷ் ஓஜா என்ற இளைஞர், ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களே நுழையத் தயங்கும் எல்லைப் பகுதிகளுக்கு இணையதள வசதியைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார். வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட துர்கேஷின் தந்தை ஒரு தச்சர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால், மிகச் சிறிய வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் துர்கேஷிற்கு ஏற்பட்டது.

தனது 5-ஆம் வகுப்பிலேயே அருகில் உள்ள தையல் கடையில் உதவியாளராகச் சேர்ந்தார் துர்கேஷ். ஆரம்பத்தில் பட்டன் தைப்பது போன்ற வேலைகளுக்காக வெறும் ₹5 முதல் ₹10 வரை கூலி பெற்றார். 10-ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு முழு சட்டை மற்றும் பேண்ட்டைத் தைக்கும் அளவிற்குத் திறமை பெற்றார். திருமண காலங்களில் கூடுதல் வேலை செய்து குடும்பத்திற்கு உதவி வந்தார்.

8-ஆம் வகுப்பு படிக்கும்போது தனது அண்ணனின் அறிவுரைப்படி கணினி வகுப்பில் சேர்ந்தார் துர்கேஷ். அந்த ஆர்வம் தொழில்நுட்பத்தின் மீது அவருக்குத் தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது. 2014-இல் ‘வயர்லெஸ் இன்டர்நெட்’ (Wireless Internet) குறித்துத் தெரிந்து கொண்ட அவர், 2015-இல் “Hybrid Internet” என்ற நிறுவனத்தைத் தொடங்கி இணையதளச் சேவை வழங்கத் தொடங்கினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hybrid Internet (@hybridinternet)

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எட்ட முடியாத கடினமான மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களைக் குறிவைத்து துர்கேஷ் தனது சேவையை விரிவுபடுத்தினார். வடகிழக்கு மாநிலங்களான  மிசோரம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இணைய வசதியை ஏற்படுத்தியுள்ளார்.  மொபைல் நெட்வொர்க் கூட இல்லாத அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள ஒரு அனாதை இல்லப் பள்ளிக்கு இணையதள வசதி வழங்கினார். லடாக்கில் உள்ள 300 மருத்துவமனைகளைத் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் இணைக்கும் சவாலான பணியை இவரது குழு வெற்றிகரமாக முடித்தது.

இன்று மாதம் ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் துர்கேஷ், இதை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல் சமூகத் தேவையாகக் கருதுகிறார். மேலும் கடின உழைப்பும் சரியான இலக்கும் இருந்தால், சிறிய நகரத்தில் இருந்து வந்தாலும் சாதிக்க முடியும் என்பதற்குத் துர்கேஷின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.