நாம் எந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாலும், அங்குள்ள படுக்கைகளில் பளிச்சிடும் வெள்ளை நிற விரிப்புகளே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, இதன் பின்னணியில் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வண்ணமயமான விரிப்புகளைத் தவிர்த்து, ஹோட்டல் நிர்வாகங்கள் ஏன் வெள்ளையைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

வெள்ளை நிறத்தில் சிறு அழுக்கு அல்லது கறை பட்டாலும் அது உடனடியாகத் தெரிந்துவிடும். இது ஹோட்டல் ஊழியர்களுக்கு வேலையை எளிதாக்குகிறது. அழுக்கடைந்த விரிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து மாற்ற இது உதவுகிறது. அதேபோல், வெள்ளை நிறத்தைப் பார்க்கும்போது பயணிகளுக்கு அந்த அறை சுத்தமாக இருக்கிறது என்ற நம்பிக்கையும், நிம்மதியும் கிடைக்கிறது.

வெள்ளை நிறம் எப்போதும் அமைதி மற்றும் புத்துணர்ச்சியுடன் தொடர்புடையது. அறையின் மற்ற அலங்காரங்கள் எவ்வளவு ஆடம்பரமாக இருந்தாலும், வெள்ளை நிற விரிப்புகள் அந்த இடத்திற்கு ஒரு எளிய மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. ஹோட்டல்களில் தினமும் நூற்றுக்கணக்கான விரிப்புகள் துவைக்கப்படுகின்றன.

அனைத்து விரிப்புகளும் வெள்ளையாக இருந்தால், அவற்றை நிற வாரியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தையும் ஒரே இயந்திரத்தில் போட்டுத் துவைக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகிறது. வண்ண விரிப்புகள் என்றால் அடிக்கடி துவைக்கும்போது நிறம் மங்கிவிடும். ஆனால், வெள்ளையில் அந்தப் பயம் இல்லை. பிளீச்சிங் (Bleach) போன்ற வலுவான ரசாயனங்களைப் பயன்படுத்தி கறைகளை நீக்கினாலும், வெள்ளை நிறம் பாதிக்கப்படாது. இது விரிப்புகளை நீண்ட காலத்திற்குப் புத்தம் புதியதாக வைத்திருக்க உதவுகிறது.

ஆரம்ப காலங்களில் ஹோட்டல்களில் கறைகளை மறைப்பதற்காக வண்ணமயமான அல்லது பூக்கள் போட்ட விரிப்புகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் கறைகளை மறைப்பதை விட, தூய்மையை வெளிப்படையாகக் காட்டுவதையே வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஹோட்டல் நிறுவனங்கள் உணர்ந்து கொண்டன.

இன்று உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஹோட்டல் நிறுவனங்கள் இந்த ‘வெள்ளை நிற’ முறையையே ஒரு தரக்கட்டுப்பாடாகப் பின்பற்றி வருகின்றன. நாம் தங்கும் அறையில் நமக்குத் தெரியாமல் செய்யப்படும் இத்தகைய சிறு விஷயங்களே, நமது பயண அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்றுகின்றன.