கேரளா மாநிலம் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, கல்லூரி முதல்வர் அறையிலிருந்து அவர் அழுதுகொண்டே வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் (BDS) இறுதியாண்டு படித்து வந்த நிதின் ராஜ், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கல்லூரி கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது முக்கியச் சிசிடிவி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின்படி, மதியம் 1:20 மணியளவில், கல்லூரி முதல்வர் வினோத் மோனியின் அறையிலிருந்து நிதின் ராஜ் வெளியே வருகிறார். அப்போது அவர் தனது கண்களைத் துடைத்தபடி, அழுதுகொண்டே வருவது கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த அறையில் முதல்வர் வினோத் மோனி, பேராசிரியை லதா சசிதரன் மற்றும் இரு ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.
முதல்வர் அறையிலிருந்து வெளியேறிய சரியாக 18 நிமிடங்களில், அதாவது மதியம் 1:38 மணிக்கு, நிதின் ராஜ் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.கே. ராம் மற்றும் சங்கீதா நம்பியார் ஆகியோர் அந்தக் காட்சிகளில் இடம்பெறவில்லை. இருப்பினும், முதல்வர் அறையில் நிதின் ராஜ் கடுமையாகக் கண்டிப்பிற்கு உள்ளாக்கப்பட்டாரா அல்லது மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டாரா என்ற கோணத்தில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கல்லூரியின் சிசிடிவி பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் தங்களது வசம் எடுத்துள்ளனர். ஒரு மாணவர் முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
