அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 40 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்ற லியா டெய்லர் என்ற பெண் ஓட்டுநருக்கு, நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆஸ்துமா அட்டாக் (Asthma attack) ஏற்பட்டுள்ளது. அவர் தனது மருந்தினை எடுப்பதற்குள் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.

டிரைவர் சீட்டில் ஆள் இல்லாமல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடுவதைப் பார்த்த மாணவர்கள், ஒரு நொடி கூட தாமதிக்காமல் களத்தில் இறங்கினர்.

அங்கிருந்த ஒரு மாணவர் உடனடியாக ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று பிரேக்கை அழுத்த, மற்ற மாணவர்கள் எமர்ஜென்சி எண்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

மாணவர்களின் இந்த அதிரடி மற்றும் சமயோசித முடிவால், பேருந்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஓட்டுநரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். “எங்கள் ஹீரோக்கள்” என அந்த பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் மாணவர்களைக் கொண்டாடி வருகின்றனர்.