மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் 4 வயது அப்பாவி சிறுவனைப் பயன்படுத்தி பெண்கள் கும்பல் ஒன்று கடையில் இருந்த நன்கொடை பெட்டியைத் திருடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றச்செயல்களுக்குக் குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்திய இந்தக் கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

லாத்தூரில் உள்ள ஒரு முட்டைக் கடைக்கு 4 பெண்களுடன் அந்த 4 வயது சிறுவன் வாடிக்கையாளரைப் போலச் சென்றுள்ளான். கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் அந்தப் பெண்கள் அவரைச் சுற்றி நின்று மறைத்துள்ளனர். அப்போது அவர்கள் சைகை காட்டியதும், அந்தச் சிறுவன் மேசையிலிருந்த நன்கொடை பெட்டியை எடுத்துப் பைக்குள் மறைத்துக்கொண்டு பெண்களுடன் தப்பியோடியுள்ளான்.

நன்கொடை பெட்டி காணாமல் போனதை அறிந்து சந்தேகமடைந்த கடைக்காரர், சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோதுதான் அந்தப் பெண்கள் சிறுவனைத் தூண்டிவிட்டுத் திருட வைத்தது அம்பலமானது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லாத்தூர் நகர காவல்துறையினர் சிசிடிவி ஆதாரங்களைக் கைப்பற்றிச் சம்பந்தப்பட்ட பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக லாத்தூர் பகுதியில் கடைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பணத்தையும் பொருட்களையும் திருடுவதற்கு இதுபோன்று குழந்தைகளைப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சிறுவயதிலேயே குழந்தைகளைக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் இத்தகைய கும்பல்களால் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தச் சிசிடிவி பதிவு அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. குழந்தையைத் தவறாகப் பயன்படுத்திய அந்தப் பெண்கள் கும்பலை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.