வேலைக்கான நேர்காணல் முதல் பணியில் சேரும் நாள் வரை, பொதுவாக நிறுவனம்தான் வேட்பாளரை மதிப்பீடு செய்யும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த தொழில்முனைவோர் அபிஷேக் அகர்வால் பகிர்ந்துள்ள ஒரு சம்பவம், வேலை தேடுபவர்களும் நிறுவனத்தின் பணிச்சூழலை கவனித்து முடிவு செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களில் நான்கு சுற்று நேர்காணலுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், பணியில் சேர வந்த முதல் நாளிலேயே சுமார் 10 நிமிடங்கள் அலுவலகத்தில் இருந்துவிட்டு வேலையை நிராகரித்துள்ளார்.

அவர் வேலையை ஏற்க மறுத்ததற்கான காரணம் சம்பளம் அல்லது பதவி அல்ல. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மன அழுத்தத்தில் இருப்பதைப் போலவும், யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லாதது போலவும் தனக்குத் தோன்றியதாக அந்த வேட்பாளர் தெரிவித்தார். மேலும், கூட்டறையிலிருந்து வெளியே வந்த ஒருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை முதலில் எதிர்பாராத ஒன்றாகப் பார்த்த அபிஷேக், பின்னர் தனது அலுவலகத்தை அதே கோணத்தில் கவனிக்கத் தொடங்கினார்.

அப்போது வேட்பாளர் கூறியது முழுமையாக தவறு அல்ல என்பதை அவர் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. அலுவலகத்தில் பராமரிப்பின்றி இருந்த செடிகள், வெறிச்சோடிய பொதுப் பகுதி மற்றும் இயந்திரத்தனமாக பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் ஆகியவை அவரது கவனத்துக்கு வந்தன. இதையடுத்து அந்த நபரை மீண்டும் அழைத்த அபிஷேக், வேலைக்கு வருமாறு கேட்பதற்குப் பதிலாக அலுவலக பணிச்சூழலை மாற்றுவதற்கு உதவுமாறு கேட்டுள்ளார். அந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு சுமார் மூன்று மாதங்களில் அலுவலகச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றும் விகிதம் 70 சதவீதம் அதிகரித்ததாகவும், விற்பனை சுமார் 30 சதவீதம் உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஒரு ஆண்டுக்குள் அந்த நபர் ‘சீஃப் பீப்பிள் ஆபீசர்’ என்ற முக்கியப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்காக வந்த ஒருவர், நிறுவனத்தின் பணிச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தி அதே நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக மாறிய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.