மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், உடன்பிறப்புகளின் பாசத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்றே வாலிபர் ஒருவர் தனது வாழ்க்கையை மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உடன்பிறந்த சகோதரி தன் அண்ணனின் கையில் பாசக்கயிறு கட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அந்தப் புனிதமான நாளில், எதிர்பாராத விதமாக இளைஞர் எடுத்த இந்த விபரீத முடிவு அந்த குடும்பத்தின் சந்தோஷத்தை அடியோடு சாய்த்துவிட்டது. பாசமும் கொண்டாட்டமுமாக இருக்க வேண்டிய வீட்டின் சூழல், ஒரே நொடியில் கதறலும் கண்ணீருமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக அந்த இளைஞர் தனது நண்பருக்கு ஒரு உருக்கமான வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அக்கா… இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்” என்று தன் அக்காவைக் குறிப்பிட்டுத் தனது கடைசி ஆசையையும், பொறுப்புகளையும் சோகத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் தன் குடும்பத்தைப் பாதுகாக்கவும், பொறுப்புகளைச் சுமக்கவும் தன் அக்காவையே நம்பியிருந்த அந்த இளைஞனின் இறுதி வார்த்தைகள், அந்த வீடியோவைப் பார்த்த அனைவரின் நெஞ்சையும் உரையவைத்துள்ளது. நண்பனுக்கு அந்த வீடியோ சென்று சேர்ந்து, அவர்கள் சுதாகரித்துக் கொண்டு வருவதற்குள் அந்த வாலிபரின் உயிர் பிரிந்துவிட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் இத்தகைய தீவிர முடிவை எடுத்ததற்கான பின்னணி என்ன, கடன் பிரச்சினையா அல்லது தனிப்பட்ட மன உளைச்சலா என்ற கோணத்தில் வீடியோ ஆதாரங்கள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
