சிவகங்கை தொகுதி எம்.பி. மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர் கார்த்தி சிதம்பரம், இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். பாஜகவினர் ஒவ்வொரு அமைப்பையும் “காவி மயமாக்கும்” முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார். மேலும், இந்தி மற்றும் இந்துத்துவா சிந்தனைகளை திணிப்பதே பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்கிறது, ஆனால் இது தமிழகத்தில் எவ்வளவாக முயன்றாலும் நிறைவேறாது என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, “2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். தமிழக மக்கள் மதச்சார்பற்ற அரசியலையே ஆதரிக்கிறார்கள். பாஜகவின் மத அடிப்படையிலான அரசியலுக்கு இங்கு வாய்ப்பே இல்லை,” எனக் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், “எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு நேரடியாக மக்கள் வாக்களித்து வென்றவர் இல்லை. அவர் ஒரு அரசியல் விபத்தால் முதல்வர் ஆனவர். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, 2026ல் நடக்கும் 4-வது இன்னிங்சிலும் எடப்பாடி அவுட் ஆகப்போகிறார்” என வலியுறுத்தினார்.
