தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்..

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் துரிதப்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களை நியமித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.. மேலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.. இந்த 4 மாவட்ட மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ராஜ்பவன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களையும், இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள்.

அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில அமைப்புகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!: ஆளுநர் ரவி” என தெரிவித்துள்ளது.