ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். லக்னோ அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், ஆரம்பத்தில் 12 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானம் காட்டிய வைபவ், திடீரென கியரை மாற்றி ருத்ரதாண்டவம் ஆடினார்.

அடுத்த 26 பந்துகளில் மட்டும் சும்மா இடி மின்னலாய் 82 ரன்களை விளாசித் தள்ளியவர், ஒட்டுமொத்தமாக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 அசுரத்தனமான சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து லக்னோவின் வெற்றி கனவை சுக்குநூறாக்கினார். ​வெறும் 7 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு வைபவ் அவுட்டான போது, மைதானத்தில் ஒரு அரிய நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது. தங்களது அணியை கதறவிட்ட அந்த 15 வயது சிறுவனுக்காக லக்னோ அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் எழுந்து நின்று கைதட்டி தங்களது மரியாதையை செலுத்தினர்.

போட்டி முடிந்ததும் சஞ்சீவ் கோயங்கா நேரடியாக வைபவ் சூர்யவன்ஷியிடம் சென்று தனிப்பட்ட முறையில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். இந்த காட்சியைப் பார்த்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கமெண்டரியில் ஜாலியாக, “அடுத்த ஏலத்துல சஞ்சீவ் கோயங்கா உன்னை லக்னோ அணிக்கு தூக்கப் போறாரு பாரு” என கலாய்த்தார். இந்த அதிரடி வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.