ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி, ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அவர், தனது அதிரடி இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 விண்ணை முட்டும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
குறிப்பாக 278.37 என்ற அசுர வேக ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. போட்டிக்குப் பிறகு பேசிய வைபவ், “முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் யஷஸ்வி ஜைஸ்வால் பாய் என்னிடம் ‘இன்று சுதந்திரமாக விளையாடு’ என்று கூறினார்.
பந்து பேட்டில் நன்றாக வந்ததால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்” என்றார். வைபவ்வின் இந்த அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் என்ற மலைப்பூட்டும் ஸ்கோரை எட்டியது. எதிரணி பந்துவீச்சாளர்களின் பலத்தை முன்கூட்டியே கணித்து ஆடிய வைபவ்வின் இந்த இன்னிங்ஸ், இந்த சீசனின் மிகச்சிறந்த சதங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
