ஐடிபிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ மற்றும் தற்போதைய பிரபல தொழிலதிபரான சிவசரண் சிங் என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த நபர், அவரை ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளாக சிவசரண் சிங்கிடம் ஓட்டுநராக இருந்த சந்தீப் குமார் மிஸ்ரா என்ற நபர், தனது முதலாளியின் கார் பயணங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை அவருக்குத் தெரியாமல் லேப்டாப் மற்றும் மொபைல் மூலம் ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த ஓட்டுநர் தனது வேலையை விட்டு நின்ற பிறகு, இந்த ரகசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து தொழிலதிபரை மிரட்டத் தொடங்கியுள்ளார். அந்த ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகக் கூறி, தொழிலதிபரிடம் 35 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் உடனடியாக போலீசில் புகார் அளித்ததை அடுத்து, மும்பை மலபார் ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சந்தீப் குமார் மிஸ்ராவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.