கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கம்சாகரா கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியா தையல்காரராக வேலை செய்துவந்தார். அவருடைய மனைவி மீனாட்சி (53). இரண்டு மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியாவை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கடூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சிக்கும், அவரது உறவினரின் மகனான பிரதீப் (33) என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. புதிதாக வீடு கட்டிய சுப்பிரமணியாவின் வீட்டில் ஆசாரி வேலைக்காக வந்த பிரதீப்புடன், மீனாட்சி அதிகம் பழகியதால், அது கள்ளத்தொடர்பாக மாறியது. இதை அறிந்த சுப்பிரமணியா இருவரையும் எச்சரித்து, அந்தத் தொடர்பை நிறுத்தும்படி கண்டித்தார். ஆனால் கள்ளக்காதலில் மூழ்கிய மீனாட்சியும், பிரதீப்பும் சுப்பிரமணியாவை வழியிலிருந்து அகற்ற திட்டமிட்டனர்.
அதன்படி, பிரதீப் தனது நண்பர்களான சித்தேஷ் மற்றும் விகாஷ் ஆகியோரிடம் உதவி கேட்டு, அனைவரும் சேர்ந்து சுப்பிரமணியாவை கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் உடலை தீவைத்து எரித்தனர். இதில் மீனாட்சியும் நேரடியாக உடந்தையாக இருந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு நால்வரும் தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் வலைவீசி பிடித்து, மீனாட்சி, பிரதீப், சித்தேஷ், விகாஷ் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
