காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. பல முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதோடு, பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து 4 நாட்கள் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் மோதல்கள் நடந்தன.

அந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் அனுப்பிய நவீன டிரோன்களை செயலிழக்கச் செய்து வீழ்த்திய சிறப்பு கமாண்டோ வீரர் கந்தன், தனது வீரத்திறனால் இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தார். இதற்காக அவருக்கு சுதந்திர தின விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களால் மிக உயரிய வீரதீர செயலுக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்-லட்சுமி தம்பதியின் மகனான கந்தனுக்கு, அவரது சொந்த ஊர் மக்கள் மற்றும் ஊராட்சி சங்க தலைவர் பாக்யராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.