இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ‘ஆட்டநாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சனின் ஆட்டம் தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. 31 வயதிலும் மைதானத்தில் சிறுத்தையாய் சுழலும் இவரது உடற்தகுதிக்கு பின்னால் இருக்கும் உணவு ரகசியங்கள் இதோ,
சஞ்சு சாம்சன் தனது ஆற்றலை (Energy level) உச்சத்தில் வைத்திருக்க மிகவும் கடுமையான உணவு முறையைப் பின்பற்றி வருகிறார். குறிப்பாக, நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆலோசனையின் பேரில் இவரது உணவுப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே இவர் உட்கொள்கிறார்.
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களின்படி, சஞ்சுவின் அன்றாட உணவு முறை பற்றி பார்க்கலாம். அதன்படி அதிகாலை வெறும் வயிற்றில் பப்பாளி அல்லது ஏதேனும் ஒரு புதிய பழம் மற்றும் பிளாக் காபி (Black Coffee). காலை உணவாக முளைக்கட்டிய பயறு, தயிர், பழங்கள், முட்டை, உப்புமா அல்லது ஓட்ஸ் மற்றும் பால்.
மதிய உணவாக பருப்பு வகைகள், டோஃபு (Tofu), வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன். மாலை நேர சிற்றுண்டி நட்ஸ் வகைகள், மூலிகை தேநீர் அல்லது தயிர். இரவு உணவாக மீன், வேகவைத்த காய்கறிகள், சாலட் மற்றும் கிச்சடி.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சஞ்சு சாம்சன், மற்ற மலையாளிகளைப் போலவே ‘கப்பா’ (மரவள்ளிக்கிழங்கு) மற்றும் மீன் குழம்பை விரும்பி உண்பார். குறிப்பாக தனது தாயார் கையால் சமைத்த இந்த உணவை அவர் மிகவும் ரசிப்பார்.
சமீபகாலமாக வறுத்த, பொரித்த உணவுகள் மற்றும் ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் துரித உணவுகளைச் சஞ்சு முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் சுமார் இரண்டு மாதங்கள் முட்டை, சிக்கன் உள்ளிட்ட எதையும் சேர்க்காமல் தீவிரமான ‘வீகன்’ (Vegan) உணவு முறையையும் இவர் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
