அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக மகுடம் சூடியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் நள்ளிரவில் பகிர்ந்த ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோடி மைதானத்தின் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, தனது தாய் மண்ணிற்குச் சூர்யா மரியாதை செலுத்திய காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது. அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 2:48 மணியளவில் அவர் ஒரு பதிவை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தான் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை சூர்யா மேற்கோள் காட்டியுள்ளார். அன்று ஒரு நண்பரின் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “நண்பனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டிருந்தார். இன்று அதே பாணியில் உலகக்கோப்பை ட்ரோபியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இன்று இந்த மனிதனுக்காக (எனக்காக) நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

12 ஆண்டுகளில் ஒரு சாதாரண வீரராக இருந்து, உலகக்கோப்பையை ஏந்தும் கேப்டனாக அவர் உயர்ந்திருக்கும் விதம் அவரது கடின உழைப்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது. தனது கிரிக்கெட் பயணம் குறித்து சூர்யா முன்னரே ஒருமுறை குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. “எனக்கு 29 வயதாக இருந்தபோது, இந்தியா-ஏ அணி அறிவிக்கப்படும் போதெல்லாம் எனது தந்தை இணையதளங்களில் எனது பெயர் இருக்கிறதா எனத் தேடுவார்.

பெயர் இல்லையென்றால் வருத்தத்துடன் போன் செய்வார். நான் அவரிடம் ‘பரவாயில்லைப்பா, பார்த்துக்கொள்ளலாம்’ என்பேன்” என்று அவர் கூறியிருந்தார். 30 வயதில் அறிமுகமாகி, இன்று 35 வயதில் இந்தியாவிற்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார் இந்த ‘மிஸ்டர் 360’. 2024 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான அணியில் முக்கிய வீரராக இருந்த சூர்யா, இன்று கேப்டனாகச் சாதித்துள்ளார்.

இருப்பினும், இறுதிப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்) ஆட்டமிழந்தது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும், அவரது சிறப்பான தலைமையின்கீழ் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு கோப்பையை வென்றுள்ளது. மேலும் “இந்திய அணியின் இந்த வெற்றிப் பயணம் தொடரும்” என்று போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் சூர்யா மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.