அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய சாதனைகளை இந்திய அணி படைத்துள்ளது. 2024-ல் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா, தற்போது 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் வென்று, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இருமுறை வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது.

 டி20 உலகக்கோப்பை வரலாற்றில், போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். டி20 உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (52), சஞ்சு சாம்சன் (89) ஜோடி நியூஸிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்தது. இவர்கள் இருவரும் 7.1 ஓவர்களிலேயே 98 ரன்களைக் குவித்தனர். பின்னர் இஷான் கிஷன் (54) அரைசதம் கடந்து வலுசேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் ஜிம்மி நீஷம் ஒரே ஓவரில் சஞ்சு, இஷான் மற்றும் சூர்யகுமாரை (0) அவுட் செய்து திருப்புமுனை ஏற்படுத்தினாலும், இந்தியா 250 ரன்களைக் கடந்தது.

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சீஃபர்ட் (52), சாண்ட்னர் (43) மட்டுமே ஓரளவுக்குப் போராடினர்.

தோல்விக்குப் பிறகு பேசிய நியூஸிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “இந்தியா போன்ற ஒரு வலுவான அணியிடம், அதுவும் அவர்களது சொந்த மண்ணில் தோற்றதில் பெரிய வருத்தமில்லை. மைதானம் முழுவதும் நீல நிறக் கடலாகக் காட்சியளித்தது. இந்தியா போன்ற சிறந்த அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானது. எனது வீரர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், இந்தியா நிர்ணயித்த இலக்கை 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.