அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்து பட்டதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இருமுறை மன்னிப்பு கேட்ட சம்பவம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அதாவது நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார். இதனால் சற்று ஆக்ரோஷமடைந்த அர்ஷ்தீப் சிங், ஐந்தாவது பந்தை வீசிவிட்டு, அது தன்னிடம் வந்தவுடன் உடனடியாக பேட்ஸ்மேன் திசையை நோக்கி வேகமாக எறிந்தார்.

துரதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து நேராக டேரில் மிட்செல் மீது பலமாகத் தாக்கியது. இதனால் மிட்செல் கடும் கோபமடைந்தார். உடனடியாகத் தனது தவறை உணர்ந்த அர்ஷ்தீப் சிங், களத்திலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி கோப்பையை வென்று கொண்டாட்டத்தில் இருந்தபோதும் அர்ஷ்தீப் சிங் தனது கண்ணியத்தை மறக்கவில்லை. அவர் நேராக டேரில் மிட்செலிடம் சென்று, மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரினார். விளையாட்டையும் தாண்டி வீரர்களுக்கிடையிலான இந்த நற்பண்பு குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.