2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் துணிச்சலான ஆட்டத்தையும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்தின் திட்டங்களையும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசிய சோயப் அக்தர், “அபிஷேக் சர்மா இன்னும் வளரும் இளம் வீரர், அவர் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. ஆனால் சஞ்சு சாம்சன் மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று இந்தியாவின் கொள்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. சரியான வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை முன்னிலைப்படுத்தி விளையாட வைப்பதன் மூலம் தாங்கள் சரியான திசையில் பயணிப்பதை இந்தியா நிரூபித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் அணியில் இல்லாத நிலையிலும் உலகக்கோப்பையை வென்றது, இந்திய அணியின் அபாரமான திறமையைப் பறைசாற்றுவதாக அவர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சி குறித்துப் பேசிய அக்தர், “மைதானங்கள், நவீனப் பயிற்சிகள், இயந்திரங்கள் மற்றும் வீரர்களுக்காக இந்தியா பெருமளவில் முதலீடு செய்கிறது. இந்திய கிரிக்கெட் செல்லும் உயரத்தைப் பார்க்கும்போது, அந்த கடின உழைப்பிற்கும் முதலீட்டிற்கும் உரிய பலன் கிடைத்துள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
