2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, இந்தியாவிற்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடும் அதிருப்தியில் உள்ளார். அவரது முன்கணிப்புகள் அனைத்தும் பொய்யான நிலையில், நேரலை நிகழ்ச்சியில் அவர் காட்டிய எரிச்சல் தற்போது விவாதமாகியுள்ளது.
பாகிஸ்தானின் ‘ஜியோ நியூஸ்’ தொலைக்காட்சியின் ‘ஹன்ஸ்னா மனா ஹை’ (Hasna Mana Hai) நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீரிடம், “இந்தியா ஜெயித்துவிட்டது, உங்கள் கணிப்பு பொய்த்துவிட்டதே, என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமீர் மிகுந்த கோபத்துடன், “ஜெயித்தார்கள்.. அவ்வளவுதான். கோப்பையை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள், என் வீட்டுக்கா கொண்டு வரப்போகிறார்கள்? வெல் டன்” என்று எரிச்சலுடன் பதிலளித்தார்.
View this post on Instagram
இந்தத் தொடர் முழுவதும் இந்தியாவிற்கு எதிராகவே அமீர் பேசி வந்தார். “இந்தியா அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறாது” என்றும், அரையிறுதியில் “இங்கிலாந்துதான் வெல்லும்” என்றும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக இறுதிப் போட்டியில், “இந்தியா முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, பந்துவீசினாலும் சரி.. நியூஸிலாந்துதான் கோப்பையை வெல்லும்” என்று அடித்துக் கூறினார். ஆனால் அவரது கணிப்புகள் அனைத்தும் தவறானதால், ரசிகர்கள் அவரை ‘போலி ஜோசியக்காரர்’,என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
முன்னதாக, அமீரின் இத்தகைய தேவையற்ற கணிப்புகளைக் கண்டித்த இந்திய முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து, அவரை ஒரு ‘போலி பாபா என்று கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வெற்றியை முழுமனதோடு ஏற்காத அமீர், அரையிறுதிப் போட்டியில் ஹாரி புரூக், சஞ்சு சாம்சனின் கேட்ச்சை விட்டதால்தான் இங்கிலாந்து தோற்றது என்றும், இல்லையென்றால் இங்கிலாந்துதான் வென்றிருக்கும் என்றும் ஒரு வினோதமான காரணத்தைக் கூறித் தனது கணிப்பை நியாயப்படுத்த முயன்றார்.
மேலும் அமீரின் இந்த எரிச்சலான பேச்சுக்கும், தோல்வி குறித்த விரக்திக்கும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
