சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக மகுடம் சூடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியில், கேரளாவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் பங்களிப்பு மிக முக்கியமானது. தொடர் நாயகன் விருதினை வென்ற அவர், தனது ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

31 வயதான சஞ்சு சாம்சன், இந்தத் தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 321 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 24 சிக்ஸர்கள் மற்றும் 27 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக, நாக்-அவுட் சுற்றுகளில் அவர் காட்டிய அதிரடி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்கள் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்கள் எனத் தொடர்ந்து மூன்று முக்கியமான போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

அணி நிர்வாகம் அவரைத் தொடக்க வீரராகவும், சில நேரங்களில் வெவ்வேறு வரிசைகளிலும் களமிறக்கியது. ‘ஆடும் லெவன்’ அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல், உள்ளே-வெளியே எனப் பல போராட்டங்களைச் சந்தித்த சஞ்சு சாம்சன், கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை நிரூபித்து ‘தொடர் நாயகன்’ விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் சக வீரர் வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சனிடம் வேடிக்கையாக ஒரு கேள்வியைக் கேட்டார். “என்ன தல.. நாக்-அவுட் மேட்ச்னாலே 80, 90 ரன்கள் தானா?” என சுந்தர் கேட்க, அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த சஞ்சு சாம்சன், “நம்ம வழி தனி வழி” எனத் ரஜினிகாந்த் பாணியில் பதிலளித்தார். நகைச்சுவையாகச் சொன்னாலும், தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அவர் உருவாக்கி இருப்பதை இந்த வெற்றி உறுதி செய்துள்ளது.

மேலும் தற்போது உலகக்கோப்பை நாயகனாகக் கொண்டாடப்படும் சஞ்சு சாம்சன், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.