இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். இந்த நிலையில், பலரது கவனமும் கிரிக்கெட் களத்தைத் தாண்டி, இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் சஞ்சு சாம்சனின் குடும்பப் பின்னணியின் பக்கம் திரும்பியுள்ளது.
அதாவது கடந்த 1994, நவம்பர் 11-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த சஞ்சு சாம்சன், மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் டெல்லியில் பயிற்சியைத் தொடங்கிய அவர், பின்னர் கேரளாவுக்குக் குடிபெயர்ந்தார். 2007-ல் கேரளாவின் 13 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கும் தலைமை தாங்கினார். 2008-09 விஜய் மெர்ச்சண்ட் கோப்பை தொடரில் அவர் அடித்த இரட்டைச் சதம், கேரள அணியின் ரஞ்சி கோப்பை கனவை நனவாக்கப் பெரிதும் உதவியது.
சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் மற்றும் தாய் லிஜி விஸ்வநாத். தந்தை சாம்சன் விஸ்வநாத், டெல்லி காவல் துறையில் காவலராகப் பணியாற்றியவர். அதுமட்டுமின்றி, சிறந்த கால்பந்து வீரரான அவர், டெல்லி அணிக்காக சந்தோஷ் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ளார்.
தன் மகனின் கிரிக்கெட் எதிர்காலத்திற்காக, சாம்சன் விஸ்வநாத் டெல்லி காவல் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, குடும்பத்துடன் கேரளாவுக்குக் குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மகனின் கிரிக்கெட் கனவை நனவாக்க அவர் செய்த இந்தத் தியாகம், சஞ்சு சாம்சனின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. சஞ்சு தனது தந்தை மீது மிகுந்த அன்பைக் கொண்டிருப்பதை, சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்துவார்.
சஞ்சு சாம்சனுக்கு சாலி சாம்சன் என்ற மூத்த சகோதரர் உள்ளார். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது பலரும் அறியாத தகவல். கேரள கிரிக்கெட் அணிக்காகப் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள சாலி, காயம் காரணமாகப் பாதியில் கிரிக்கெட் பயணத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும், நான்கு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் களத்திற்குத் திரும்பியபோது, சஞ்சு சாம்சன் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சாலி சாம்சன் கணக்காயர் ஜெனரல் (AG) அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் கிரிக்கெட் களத்தில் வெற்றிகளைப் குவித்து வரும் சஞ்சு சாம்சன், தன் குடும்பத்தின் ஆதரவோடும், வலுவான பின்னணியோடும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
